Sunday, June 22, 2008

குவைத்தில் தவிக்கும் தமிழர்கள் 9 பேரை மீட்க தமுமுக தலைவர் தமிழக முதல்வருக்கு கடிதம்!

குவைத்தில் தவிக்கும் தமிழர்கள் 9 பேரை மீட்க
தமுமுக தலைவர் தமிழக முதல்வருக்கு கடிதம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகதத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்;



''கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவைச் சேர்ந்த ரவிச்சந்திரன், உதயகுமார், முருகன், கருணாகரன், அப்துல்கனி மற்றும் திருவாரூர் மாவட்டத்தைச் மணிவண்ண பாண்டியன், ராஜாராமன், முருகானந்தம், இளையராஜா ஆகிய 9 நபர்கள் குவைத்தில் அல்ஹசீரா கார் ரென்டிங் எஸ்டேட் என்கிற கம்பெனியில் பேருந்து ஓட்டுனர் பணிக்காக சென்றனர். இவர்களை கடலூர் மாவட்டம் சாத்தப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும், திருவாரூர் மாவட்டம் கூடுரைச் சேர்ந்த முருகன் என்ற இருவரும் ''குவைத்தில் டிரைவர் வேலை இருக்கு, மாசம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம், தங்குமிடம், சாப்பாடு இலவசம்'' என்று ஆசை வார்த்தைகளால் வீழ்த்தியுள்ளனர். உடனே அவர்களும் வீட்டிலிருந்த நகைகளையெல்லாம் அடகு வைத்து தலா ரூ.90 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து கடந்த 2005-ம் ஆண்டு குவைத்திற்கு சென்றுள்ளனர்.



குவைத்திற்கு சென்ற உடனேயே இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இவர்களுக்கு நாளொன்றுக்கு 21 மணி நேரம் வேலை, மூன்று மணி நேரம் தான் தூக்கம். காலையிலே 4 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஓட்டுனர் வேலை; ஆறு மணிக்கு மேல் இவர்களது முதலாளி பாலைவனத்துலே கட்டும் கெஸ்ட் ஹவுசில் சித்தாள் வேலை, என இவர்கள் பிழிந்து எடுக்கப்பட்டுள்ளனர். சரிவர உறக்கமும், ஓய்வும் இல்லாததால் வெகு விரைவில் இவர்கள் உடல் மெலிந்து விட்டது. முதலில் கூறியபடி இவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படவில்லை 8500 ரூபாய்தான் சம்பளம் கொடுத்துள்ளனர். அதிலும் சாப்பாடு மற்றும் தங்குமிடத்திற்காக நாலாயிரம் ரூபாய் செலவு செய்யும் நிலை. சம்பளமும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் வழங்கியுள்ளனர். முறையாக சம்பளத்தைக் கேட்டால் கூட கம்பியாலும், பூட்ஸ் காலாலும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். அடிப்பட்ட நிலையில் உடம்பு முழுவதும் காயத்துடன் வலியைப் பொறுத்துக் கொண்டு பேருந்தை ஓட்டியுள்ளனர்.



இதில் ரவிச்சந்திரன் என்பவருடைய அப்பா தனது மகன் படும் துன்பம் அறிந்து மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது இறுதிக் காரியம் செய்வதற்காக ஊருக்கு வர 15 நாட்கள் லீவு கேட்டுள்ளார். அதற்கு 'நீ போனவுடனே உங்கப்பா என்ன உயிரோடவா வந்திடப் போறாரு?'ன்னு ஏளனம் பேசி லீவு தர மறுத்துள்ளனர். மேலும் இவரது தங்கை அமுதவல்லியின் திருமணத்துக்குக் கூட அவரால் வர முடியவில்லை.



தொடர்ந்து துன்பத்திற்குள்ளான இவர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறி குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் போய் புகார் செய்து தங்களை தாய் நாட்டுக்கே திரும்ப அனுப்பும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தூதரக அதிகாரிகள் இவர்கள் பிரச்சனையை தீர்க்க முயலாமல் பாராமுகமாக இருந்துள்ளனர். இந்நிலையில் கையில் காசில்லாததால் பசி மயக்கத்திலும் கால் போன போக்கில் சுற்றியிருக்கிறார்கள்.



ஒரு வார கால பட்டினிப் போராட்டத்திற்குப் பின்னர், ஒருவழியாய் குவைத்தில் டிரைவராய் இருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பீர் மரைக்காயரைச் சந்தித்திருக்கிறார்கள். அவரும் மனிதாபிமானத்துடன் இவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளார்.


திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடமும் இவர்கள் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் தவிக்கும் 9 தமிழர்களை மீட்பதற்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் அன்புடன் கோருகிறேன்''


என்று தமுமுக தலைவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments: